அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்த விசாரணையை முடிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் கால அவகாசம் வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மீதான 280 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம், விசாரணை நடத்தி வருகிறது. சூரப்பா மீதான ஊழல், முறைகேடு புகார்களுக்கு முகாந்திரம் உள்ளதாக ஆணையம் அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஆணையத்தின் அவகாசம் கடந்த 11ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தங்களுக்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் தேவை என ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் உயர்கல்வித்துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று, ஆணையத்துக்கு மேலும் மூன்று மாத கால நீட்டிப்பு வழங்கி உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அடுத்த மூன்று மாத காலத்துக்குள் விசாரணையை முடித்து, அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.
Advertisement: