அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர யாரேனும் விரும்பினால் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
5வது கட்ட தேர்தல் பரப்புரையில், ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். எத்தனை அவதாரம் எடுத்தாலும் டி.டி.வி. தினகரனால் அதிமுகவை கைப்பற்ற முடியாது என தெரிவித்தார். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சதி திட்டம் தீட்டி வருகின்றனர் என்றும், ஒரு போதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது என்றும் அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர யாரேனும் விரும்பினால் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், அதிமுக கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என்றும், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Advertisement: