நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜக தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி உள்ளிட்டோர் முன்னிலையில் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் தனது குடும்ப உறுப்பினர்களோடு பாஜகவில் இணைந்தார். அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. பின்னர் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், ராம்குமார் தனது குடும்பத்துடன் இன்று தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளதாக கூறினார். அதை தொடர்ந்து பேசிய சி.டி ரவி, வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என தெரிவித்தார்.
பின்னர் பேசிய ராம்குமார், சத்ரபதி சிவாஜி ஜெய் ஜகதம்பே என்று கூறியுள்ளார். தேசியத்தையும் தெய்வீகத்தையும் ஒன்று வெளிப்படுத்திடவர் நடிகர் சிவாஜி கணேசன். பிரதமர் மோடியும் அந்த வழியிலேயே பயணிக்கிறார். அதனால் தான் நான் பாஜகவில் இணைந்தேன் என கூறினார். மோடியின் கரத்தை பலப்படுத்த வேண்டும். நாட்டிற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். இந்திய மக்களின் சுய மரியாதையை காக்க பல திட்டங்களை பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார். எனது தந்தையின் அரசியல் பாதை எப்படி இருந்தது என அனைவரும் அறிவர். மோடியின் வழியே இனி எனது வழி. வரும் காலத்தில் தாமரை மலரும் என கூறினார்.
சிவாஜி கணேசன் காங்கிரசில் இருந்தார், ஆனால் அதற்கு நேர் எதிரான பாஜகவில் ஏன் இணைந்தீர்கள் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, காங்கிரசை விட்டு சிவாஜி வெளியேறிவிட்டார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் என கூறினார்.பல்வேறு முதல்வருக்கும், பிரதமருக்கும் எனது தந்தை சிவாஜி கணேசன் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார் என குறிப்பிட்ட ராம் குமார், தேசியத்தையும் தெய்வீகத்தையும் மீண்டும் கொண்டுவர வேண்டி பாஜகவில் இணைவதாக கூறினார்.
முன்னதாக, பாஜகவை நிறுவியவர்களில் முக்கியமானவரான தீனதயாள் உபத்யாயாவின் நினைவு தினத்தையொட்டி, பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு ராம் குமாரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில், திமுகவை குன்னூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சவுந்திர பாண்டியன் பாஜகவில் இணைந்தார். அதேபோல், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த பலரும் பாஜகவில் இணைந்தனர்.
Advertisement: