இந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் 445 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் ஆணையம் நடத்தை விதிகளை தீவிரமாக அமல்படுத்தியது. தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம், விலை மதிப்புள்ள பொருட்கள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்தது. அதோடு, வாக்களிக்க பணம், பொருட்கள் ஆகியவை விநியோகிக்கப்படுவதைத் தடுக்கவும் தீவிர நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்தது.
இதன் காரணமாக, இந்த தேர்தலில், தமிழகம் முழுவதும் 236 கோடி ரூபாய் பணமும், 176 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைககள் உள்ளிட்ட மதிப்பு மிக்க பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவை தவிர வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்த பொருட்கள், மதுபானங்கள் என 33 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்தத்தில், 445 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, 130 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இம்முறை அதைவிட 340 சதவீதம் அதிக மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Advertisement: