தமிழகம் தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

2021 தமிழகத் தேர்தல்: பரபரப்பை ஏற்படுத்திய வருமான வரி சோதனைகள்!

தேர்தல் பரப்புரை காலத்தில் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வருமான வரி சோதனைகளை பார்ப்போம்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. 5 மாநிலங்களுக்கு நடந்தாலும் இந்தியா முழுக்க கவனிக்கப்படும் தேர்தலாக தமிழக சட்டமன்றத் தேர்தல் இருக்கிறது. இதற்கு 2016 சட்டமன்றத் தேர்தல் ஒரு காரணம். அந்த சமயம் பணப்பட்டுவாடா அதிகளவில் நடந்தது எனக் கூறி தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலும் பணப்பட்டுவாடா தொடர்பாக அப்போது நடந்த வருமான வரி சோதனையை முன்வைத்து நிறுத்தப்பட்டது. அதே காரணத்திற்காக 2019 -வேலூர் மக்களவைத் தேர்தலும் ரத்தானது. இங்கெல்லாம் சில மாதங்களுக்குப் பிறகே மீண்டும் தேர்தல் நடந்தது.

இந்த நிலையில் மார்ச் தொடக்கத்தில் 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க, நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அதனையொட்டி பறக்கும் படை, வருமான வரி சோதனைகள் தீவிரமடைந்தன. இந்த நிலையில் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய வருமான வரி சோதனைகளைக் காண்போம்.

தமிழகத்தை சீரமைப்போம் என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அதே சமயம், அக்கட்சியின் பொருளாளர் சந்திரசேகருக்கு சொந்தமாக திருப்பூர், மதுரை நகரங்களிலுள்ள அலுவலகங்களில் ஐடி ரெய்டு சென்றது வருமான வரித் துறை. சந்திரசேகரின் சகோதரரும் திருப்பூர் மாவட்ட மதிமுக துணைச் செயலாளருமான கவின் நாகராஜன் வீடுகளிலும் சோதனை நடந்தது. அதில், ரூ.8 கோடி வரை கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுகவினருக்கு சொந்தமான இடங்களில்தான் இந்தத் தேர்தலில் அதிகளவில் வருமான வரி சோதனை நடந்தது. திமுகவின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரும், திருவண்ணாமலை திமுக வேட்பாளருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, கல்லூரி உள்பட 18 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் 3.5 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்தது.

திமுகவினரை உச்சக்கட்ட கொதிப்படையச் செய்தது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் நடந்த ரெய்டுதான். ஸ்டாலின் ஏப்ரல் 2ம் தேதி பரப்புரையை ஆரம்பித்த அதேநேரம் சென்னை நீலாங்கரையிலுள்ள அவரது மகள் செந்தாமரை – மருமகன் சபரீசன் இல்லத்தில் ஐடி ரெய்டு நடந்தது. நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த தகவலை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஐடி தெரிவித்தது.
ஒருநாள் முழுக்க 25 அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் 1.36 லட்சம் ரூபாயைக் கைப்பற்றியதாகவும் வீட்டுச் செலவுக்காக வைத்திருந்ததாக தெரிவித்ததை அடுத்து அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

அதே சமயத்தில் அண்ணா நகர் திமுக வேட்பாளரின் மகனும், சபரீசனுக்கு நெருக்கமானவருமான கார்த்தி மோகன் வீட்டிலும் சோதனை நடத்தினர். கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள கரூர் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி இல்லம் மற்றும் அவரது சகோதரர் அசோக் இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

வருமான வரித் துறையைப் பயன்படுத்தி பாஜக தரப்பு நெருக்கடி அளிப்பதாகவும், இதற்கெல்லாம் தாங்கள் அஞ்சமாட்டோம், மிசாவையே கண்டவர்கள் தாங்கள் என பதிலடி கொடுத்தது திமுக. ஆனால், பாஜக தமிழக பொறுப்பாளரான சி.டி.ரவி, “தகவலின்பேரிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது. கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள்தான் இந்தச் சோதனைக்கு அச்சப்பட வேண்டும்” என விளக்கம் அளித்தார்.

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் இடங்களிலும் வருமான வரி சோதனை நடந்தது. கடலூர் அதிமுக வேட்பாளரும் தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத்தின் சம்பந்திக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் மார்ச் 19ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர்.

இதேபோல உயர்கல்வித் துறை அமைச்சரும், பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.பி.அன்பழகன் நண்பர்களின் கல்லூரி, பள்ளிகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கல்லூரியில் பணிபுரியும் ஊழியர்களின் வீடுகளிலும், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நண்பருக்கு சொந்தமான இடங்களிலும் கூட சோதனை நடந்தது. இந்த சோதனைகளில் கண்டறியப்பட்டவை குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

தேவையற்ற சோதனைகளில் வருமான வரித் துறை ஈடுபடுவதாகவும், அதை தடுக்க வேண்டுமெனவும் அதிமுக தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல ஜுவல்லரி உள்பட பல நிறுவனங்களிலும், வேட்பாளர்களின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித் துறை சோதனை நடத்தியது.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, இதுவரை பறக்கும் படையினர் சோதனையில் ரூ.428 கோடி பணம் கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் தேர்தல் அதிகாரிகளை சந்தித்தனர். கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு, காட்பாடி, திருவண்ணாமலை தொகுதிகளில் தேர்தல்களை ரத்துசெய்ய வேண்டுமென அப்போது கோரிக்கை வைத்தனர்.

கடந்த தேர்தலின்போது கண்டெய்னர் லாரியில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது எனவும், அதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் இன்று வரை முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிலையில் தற்போதைய தேர்தலின்போது நடத்தப்படும் சோதனையும் என்னவாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement:

Related posts

தமிழகத்தில் களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டம்!

Saravana

ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது; முதல்வர் விமர்சனம்

Saravana Kumar

உயிருக்கு போராடும் நடிகர் பாபு – நேரில் சந்தித்து கண்கலங்கிய பாரதிராஜா

Jayapriya