மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது திமுக தமிழக மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பொதுமக்களிடம் கடந்த 2019ஆம் ஆண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்ற மனுக்கள் என்னவாயிற்று என கேள்வி எழுப்பினார். மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது கூட திமுகவினர் மக்களைப் பற்றி நினைக்கவில்லை எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மேலும், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் திறந்த வேனில் நின்றபடியே பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், கடல் போல் திரண்டு வந்துள்ள கூட்டத்தைப் பார்க்கும்போது அதிமுகவை வெற்றிபெற வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் வந்த கூட்டமாக தெரிகிறது என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியாது என்று உறுதிபடத் தெரிவித்தவர், எந்த புகார் பெட்டியையும் அவர் உடைக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். திமுகவுக்கு ஆட்சிக்கு வரும் வாய்ப்பே கிடைக்காது என்றும் கூறினார். 32 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர், இந்தியாவில் அதிகமானோர் உயர் கல்வி படிக்கும் முதல் மாநிலம் தமிழகம்தான் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
Advertisement: