தேர்தல் 2021 முக்கியச் செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்க தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது ஏன்?

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை கண்காணிக்க வேண்டும், என அரசியல் தலைவர்கள் பலரும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏன் இந்த வேண்டுகோள்? அதற்கான தேவை என்ன? அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்

2021 சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் 5 முனைப் போட்டியாக உருவெடுத்தது. கூட்டணி, வாக்குறுதி என்பதை கடந்து ஒரு வழியாக தேர்தல் திருவிழா நடந்து முடிய, கொரோனாவுக்கு மத்தியிலும் தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின. இதேபோன்று, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறுவதால், அனைத்து மாநிலங்களுக்கும் மே 2ம் தேதியே வாக்குகள் எண்ணப்படும் என, தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. ஆனாலும், வாக்குகள் எண்ணுவதற்கு இவ்வளவு கால தாமதம் ஏன் என்பது அரசியல் தலைவர்கள் பலரின் கேள்வியாக உள்ளது. அதுவரை வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக இருக்குமா என்பதும் பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சந்தேகத்திற்கு வலுவூட்டும் வகையில், ஒரு சில சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன. அசாம் மாநிலத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், கரீம்கஞ்ச் பதார்கண்டி எம்எல்ஏ கிருஷ்னேந்து பால் என்பவரின் வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையத்தின் வாகனம் பழுதடைந்ததால், தனியாருக்குச் சொந்தமான ஜீப்பில், மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாக, தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளிக்க, 4பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சென்னை வேளச்சேரி அருகே, இருசக்கர வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுசெல்லப்பட்ட விவகாரத்தில், 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனால், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் தான், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, நாம் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் ஏன் குறிப்பிட்ட தேசிய கட்சிக்கு மட்டுமே வாக்கு பதிவாகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் அரசியல் தலைவர்கள் பலரும் கலக்கத்தில் இருப்பதாக விமர்சககர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் எதிரொலியாகவே, திமுக கூட்டணிக் கட்சியினர் மே 2ம் தேதி வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கேமிராக்களின் செயல்பாடுகள், வெளியாட்களின் நடமாட்டங்களை கண்காணித்து, விதிமீறல் இருந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதே கருத்தை வலியுறுத்தியுள்ள விசிக தலைவர் திருமாவளவனும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, நமது பணி இன்னும் நிறைவடையவில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களை, இரவு பகல் பாராமல் தொண்டர்கள் மிகுந்த கவனத்துடன் பாதுகாத்திட வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் துணை ராணுவ பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு, எல்.இ.டி திரை அமைப்பு என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்த பிறகு, ஒரு மாத இடைவெளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது இது முதல் முறையல்ல. 2011 சட்டமன்றத் தேர்தலின் போதும், 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போதும் ஒரு மாதம் கழித்தே வாக்குகள் எண்ணப்பட்டன என்பது வரலாறு என்றாலும் வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகளின் சந்தேகத்தை தீர்த்து, அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் முன்பு வைக்கும் கோரிக்கையாகும்

Advertisement:

Related posts

மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!

Gayathri Venkatesan

பாஜகவில் இணைந்தார் நமச்சிவாயம்!

Niruban Chakkaaravarthi

துக்க வீட்டில் இளம்பெண் பகீர் குற்றச்சாட்டு… விழி பிதுங்கிய போலீசார்!

Niruban Chakkaaravarthi